சொந்தக்காரன்

நான் எதிர் பாராத நேரம் ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்து என் முகத்தில் விழுந்தது.  'என்ன இது மோசமாக நோகிறதே.. ? ' என அந்த பக்க கண்ணை மூடிக்கொண்டு சாபிட்ட கையாலே  கன்னத்தை தடவிய போது  முன்னால் இருந்த ராசன் படீரென என் முகத்தில் மூக்கடியில் குத்தினான்.  அவன் கோபமாக பேசிய போதுதான் புரிந்தது இது அவனின் இரண்டாவது அடி என்று. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . வலித்த இடத்தை உரஞ்சி விட்டு கையை எடுத்த போதுதான். மூக்காலும் நெற்றியாலும் ரத்தம் வருவது  தெரிந்தது . ரத்தத்தை கண்டதும் எனக்கு  கோவமும் அழுகையும் அதிகமாக வந்தது . ரத்தத்தை பார்த்து பார்த்து அழுதேன். பெரிதாக அழுதாலும் அடிப்பான் என்று வேறு பயமாக இருந்தது . அடித்த அடியில் என்முகம் வீங்கி  சொண்டும் நாக்கு போல் வந்து விட்டது. நான் முடிந்தவரை அழுகையை அடக்கி அழுதேன். ஆனால் விம்மலை அடக்க முடியவில்லை.  எதற்காக அடித்தான் என்று கேட்கவும் முடியவில்லை . அவனாகவும் சொல்லவில்லை.

இதனால் இன்னொரு முறை அடி வாங்கித்தான் காரணத்தை அறிந்து கொள்ளப் போகிறேன். அவ்வேளையில் யாக்கிரதையாக இருந்து காரணத்தை கண்டு பிடித்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

அம்மா , அப்பா , அண்ணா  யாருக்கும் நான் அடி வேண்டுவது தெரியாது. தெரிந்தாலும் என்ன செய்வார்கள் என்றும் தெரியாது. இது எல்லாவற்றிற்கும் காரணம் என் பிறப்புதான். உருவத்தில் அவனை விட சிறிதாகவும்,  பலத்திலும் அவ்வாறே இருந்தேன் . எனக்கொன்றும் பத்து வயதில்லை 26 வயதாகிறது.  ராசனுக்கு என்னை விட நாலு வயதுதான் அதிகம் . ஆனாலும் மலைபோல இருப்பான் . நான் நின்று கொண்டு அவன் தலையை தொடுவேன் உச்சியை தொட எட்டாது .  எனக்கு ரத்தம் வந்ததை பார்த்த பின்புதான் . அவனின் குரலில் சற்று கனிவு வந்தது . எனக்குள்ளும் இரத்தம் ஓடுகிறது என தெரிந்து கொண்டான் போலிருக்கிறது . அவனை திருப்பி ஏன் நான் அடிக்கக் கூடாது என என்னால் சிந்திக்கவே முடிய வில்லை . ஒரு வேளை அப்படி அடித்தால் அவன் என்னுள்ளும் ஒரு உயிர் இருந்திருக்கிறது என தொரிந்து கொள்ளும் நிலை வந்தாலும் வரும். அப்படியான முறடன் அவன் .இப்படி வந்து மாட்டுப்பட்டதை நினைக்கவே அழுகை வந்தது . அந்த இடத்தை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டும். அது படு குழியாய் இருந்தாலும் பறவாய் இல்லை என மனம் தவித்தது. ஆனால் இந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது. தெரிந்தவர்கள் எல்லோரும் ராசனது நண்பர்களே. போனாலும் திருப்பி இவனிடமே அனுப்பி விடுவார்கள். இவனுக்கு அவர்கள் எல்லோரும் பயம். ஆனால் அதனை ராசன் - அவர்கள் எல்லோரும் தன் விசுவாசிகள் என்றும் நல்ல நண்பர்கள் என்றும் எண்ணி பெருமை அடைந்தான்.

பல சமயங்களில் அவர்கள் தனித்தனியே இவனிடம் வேண்டிக்கட்டுவார்கள் . அதன் பின்னாலே தான் நல்ல நண்பர்கள் ஆகியிருப்பார்கள். ஒவ்வொரு முறை ராசன் யாருடனாவது சண்டை போடும் போது இம்முறை ராசன் வாங்கிக் கட்டப் போகிறான் என அவரவர் மனதுக்குள் எண்ணி ஆனந்தப்படுவார்கள். ஆனால் முடிவு ஏதோ அவர்களுக்கு பாதகமாகத்தான் இருக்கும் . இறுதியில் அந்த நபரும் ராசனின் எதிராளிகள் படையில் இணைந்து கொண்டு ராசனோடு ஐக்கியமாகி விடுவான்.  இவ்வாறு இணைந்தவர்களோடு சில சமயம் ராசன் மனம் விட்டுப் பேசுவான். மூன்றாமவர் ஒருவரை குறிப்பிட்டு “ அவர் அன்று என்னிட்ட நல்லா வேண்டி கட்டினவர் " என பிரச்சனையை சொல்லாமல் தண்டனையை மட்டும் ஏளனமாக சொல்லிக் கொண்டு இருப்பான். அவரும் " அப்படியா அவனுக்கு கொடுக்கத்தான் வேண்டும் கதைக்கப் பேசத் தெரியாதவன் " என பிற்பாட்டு பாடுவார் எங்கே தன்னை பார்த்து ' நீயும் வேண்டின நீ தானே ' என்று சொல்லி விடுவானோ என்ற ஏக்கமும் - ஒருவேளை வெறியில அடிச்சதால   தான் அவனிடம் அடி வேண்டியதை இவன் மறந்து விட்டானோ என்ற எண்ணமும் அவரக்கு தலை தூக்கப் பார்க்கும் . ராசனின் இந்த கை நீட்டும் பழக்கம் அவன் தன் தந்தையை விட  உயரமாக வளர்ந்ததும் வந்தது. தன்னை விட பல சாலிகளிடம் இவன் வைத்துக்கொள்வதில்லை .

எப்போது மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தானோ அன்றில் இருந்து அவனை அறியாமலே நல்லது கெட்டது எல்லாம் அவனுக்கு தெரிய வந்தது . ' எப்போதுமே அவசரப்பட்டு தவறாக நடந்து கொள்வதாக கூறி வந்த  சுற்றம் இப்போது அவன் செய்வதுதான் சரி என தலை ஆட்ட தொடங்கி இருந்தால் அவனுக்கு இந்த ஆச்சரியம் வந்தது.  தன்னை சூழ்ந்தவர்கள் எல்லோருமேதான் படு முட்டாளாக இருந்திருக்கிறார்கள் . என எண்ணி வியந்தான். எல்லோரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தெருவில் இவனை கண்டாலே பௌவியமாக நடந்து கொள்ள வேண்டும். நான் அவன் இருக்கும் வீட்டிலேயே இருக்கவேண்டியாயிற்று காரணம் இவன் என் நெருங்கிய சொந்தக்காரனாம் ஏதோ ஒரு முறையும் சொன்னார்கள். ஊரில் அம்மா அப்பா நான் இவனோடு இருப்பது தான் எனக்கு நல்லது என அடிக்கடி சொல்லி வந்தார்கள். இது வேறு ஒரு தேசம் என்பதால் இவனை விட்டால்  வேறு ஆக்களையும் தெரியாது .

இவனை எனக்கு இதற்கு முன் தெரியாது .  நான் இவனிடம் வரவும் இல்லை இவன் தான் என்னிடம் வந்தான்.  நகரத்திற்கு வந்து கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு  வந்தான். இவன் என்ன குடிக்கிறான் என்று எனக்கு தெரியவே இல்லை . அதை குடித்தால் தான் அவனக்கு பல குறை நிறைகள் கண்ணுக்கு தெரிகிறது . அவன் குடித்தால் நான் காமதேனு என நினைத்துவிடுகிறான்.  அவன் நினைத்தது எல்லாம் நான்  வைக்க வேண்டும் . பல முறை அடி வேண்டியும் நான் திருந்த வில்லை என அடிக்கடி சொல்லி அவனின் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.  எனக்கும் உடலில் எங்காவது மூளை இருக்கும் என்று நினைக்கிறானே இல்லை . இதில் நான் இவனை விட மிக அதிகம் படித்திருக்கிறேன் என்பது இன்னும் வேதனை . அவனுக்கு காதுகள் இருப்பது ' தான் சொல்லுவது வெளியில் கேட்கிறது ' என தான் அறியவே ஒழிய மற்றவர் சொல்வதை கேட்டு அதிலும் நியாயம் இருக்கிறதா  என்று புரிந்து கொள்வதற்கில்லை .  

ஒரு முறை இதை நான்  ' ஊருக்கு சொல்லிவிட்டேன் ' அதற்கும் அடித்தான். வீங்கிய சொண்டு மாறும் வரை அடிக்கமாட்டான் என்று நினைத்தேன் . மறுநாள் குடிதத்தால் அவனுக்கு மறந்து போயிற்று.

அடி வேண்டுவது எனக்கு மட்டுமே தெரிவதால்  வெளியாட்களிடம் மரியாதை இருந்தாலும் சில சமயம் நான் அடி வேண்டவது ஒருவருக்குக் கூட தெரியாமல் போய்விடுகிறதே என்ற வேதனை என்னை வாட்டியது .

என்னால் முடிந்தது எல்லாம் காந்தியால் முடிந்ததே சத்தியாக்கிரகம் இருப்பது . சாப்பிடாமல் அவனிடம் பேசாமல் இருந்தேன்  . அதுவும்  அவனுக்கு நன்றாக தெரியும் ஆனால் அது பற்றி அவன் கருத்தில் எடுப்பதாக இல்லை . பசி வந்தால் நானாக சாப்பிடுவேன்  என எண்ணியிருப்பான் போலிருக்கிறது . அவன் எண்ணமும் சரியாகவே இருந்தது. காந்தி இறுதியில் வென்றார் இங்கே இவன்தான் வென்றான் . இதை நான் உணர்ந்த போது விசத்தையாவது சாப்பிட்டு விடலாம் என்று தோன்றியது .

" உன் வாழ்க்கையில் இவ்வளவு காசை பார்த்திருக்கிறியா ?" என கேட்பான்  , எனக்கு மனதில் ' உன் வாழ்க்கையில் இப்படி வலியை  அனுபவித்திருக்கிறியா ?' என கேட்க தோன்றும் . ஆனால் - இல்லை - என அங்கும் இங்கும் தலையை ஆட்டுவதோடு அவனை பற்றி அவன் நண்பர்களிடத்தில் பெருமையும் பேச ஆரம்பித்து விட்டேன் .  பல சமயங்களில் கேள்வி விளங்காமலே பதில் 'ஆம் ' என்று செல்லுகிறேன் என்னில் திருத்தம் தெரிவதாக கூறுகிறான். கதைக்கிறேன் - திரிப்பிக் கதைக்காமல் . ஏன் பார்க்கக் கூட செய்கிறேன் திரும்பிப்பார்க்காமல். நான் சிரிப்பதை அவன் உண்மையிலேயே சிரிப்பதாக   நம்பி விடுகிறான் என்பதே என் ஆச்சரியம்.  என்ன செய்கிறேன் என்று தெரியாமலே சில வற்றை செய்கிறேன் . என்னை பற்றி நினைக்க எனக்கே வெக்கமாக இருக்கும் '. சீ.. என்ன பிழைப்பு ' என்பதே என் தேசிய கீதமாகியது .

வெறியில் கூட 'உனக்கு அடித்த போது நொந்ததா ?' என்று கேட்டதில்லை . ஆனால் அடித்தால் நோகும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். முதுகை , கன்னத்தை , வயிற்றை நான் தடவித் தடவி அழும் போது அவன் கண்ணில் - எனக்கு நோகிறது - என அவன் அறிந்து கொள்வதை  நான் பார்த்திருக்கிறேன். அடிக்கும் போது மட்டும் அவ்வளவு ஆனந்தம் அடைகிறான். சில வேளைகளில் அடிக்குப் பதிலாக ஏதாவது வேண்டித் தருவான். அது உடலெங்கும்  கடிப்பது போல் இருக்கும் . அடிக்கும் போது உடல் நோகும் பின் மனம் நோகும் .

வெளியில் சிரித்து பேசி போய்வருவோரை - இப்போது வியப்போடு பார்க்க ஆரம்பித்து விட்டேன். இவர்களும் இப்படி என்னைப் போல் யாரிடமாவது அடி வேண்டி விட்டுத்தான் இப்படி சிரித்துப் பேசி மறைக்கிறார்களா என ஆராய்வேன். இந்த வீட்டை நம்பி ஒரு பூனை ஒன்று இருகிறது .  அதுவும் அவ்வப்போது அடி வேண்டும் ஆனால்  அதன் பின் ஓடிவிடும் இவனின் முன் நிக்காது . அதனை பொறுத்தவரை கதவுகள் வெளியேறவே இருக்கிறது .   அதன் வாழ்க்கை கூட எனக்கு இல்லை .
கனவுகளில் மட்டும் நான் தான் ராஜா , ராணி எல்லாம்  அவ்வப்போது கண்டு மகிழ்வேன்.

வேலை செய்து விட்டு 'கூலி குறைவாக தருகிறார்கள் 'என்பது எனக்கு சிரிப்பை உண்டு பண்ணும். நான் என் வேலைகளுக்கு பதில் இடி வேண்டுவது அவர்களுக்கு தெரியாது . அவன் வீட்டில் இல்லாத வேளைகளில் தான் மூச்சு விடுவேன் மற்றைய தருணங்களில் என்னை தொலைத்து யாரோ ஒருவர் போல் நடித்துக் கொண்டு இருந்தேன். நான் சிந்திப்பது அவனக்கு தெரியவில்லை என்பது மட்டுமே என் சுகந்திரமாக இருந்தது . அவனக்கு வேண்டிய தெல்லாம் நான் செய்து கொடுப்பதற்காக எனக்கு சாப்பாடும் படுப்பதற்கு ஒரு துண்டு இடமும் கிடைக்கும் . விலங்குகள் கூட கட்டி வைத்து தாக்குவதில்லை சில சமயங்களில் சிலர் என்னை - இவனிடம் 'இது யார் ? ' என்று கேட்டால் . ஆனந்தமாக , பெருமையோடு “ நான் கட்டியவள்” என்கிறான்.  


- பசுந்திரா சசி

திட்டிதீர்க்க விரும்புவர்களுக்கு  : Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!


Drucken   E-Mail