மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம்

இதை ஒரு கோழைத்தனமான தற்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குற்றவாளி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை ஏற்க மறுத்துரைப்பது இயல்பு. ஆனால் நீதிமன்றத்திலேயே தண்டனையை மறுதலித்து தற்கொலை செய்து கொள்வது என்பது நான் அறிந்த வரையில் புதிது.

கடந்த புதன் கிழமை (29.11.2017) நெதர்லாந்தின் Haag நகரில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதே குற்றவியல் நடுவர்மன்ற விசாரணையின் போது பொஸ்னியா நாட்டின் முன்னைய இராணுவத் தளபதி ஸ்லோபோடன் பிரல்ஜக் (Slobodan Praljak,† 72) விசமருந்தியதைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

திட்டமிட்ட கொலை, மனித நேயமற்ற நடத்தை, பாலியல் தாக்குதல், பொதுமக்களை சட்டவிரோதமாக நாடு கடத்துதல், பொதுமக்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்தல், சட்டவிரோத சிகிச்சை அளித்தல், பொது மக்களின் சொத்துக்களை அழித்தல்… போன்ற கடுமையான போர்க்குற்றங்களுக்காக 20 வருட தண்டனையை, Praljak க்கு எதிராக நீதிபதி வழங்கிய போது, "நான் ஒரு போர் குற்றவாளி அல்ல. நான் உங்கள் தீர்ப்பை நிராகரிக்கிறேன். "என்று சத்தமாக அறிவித்து விட்டு டிவி கமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னிடம் இருந்த நஞ்சை அருந்தினார். நடப்பது என்ன என்று அறியாமல் நீதிபதி பிற குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பை வாசிக்க முற்படும் போது, Praljak க்கின் வழக்கறிஞர் தனது வாடிக்கையாளர் விஷத்தை விழுங்கி விட்டதாக அறிவித்ததுடன் நீதிமன்றத்தில் பரபரப்பு ஆரம்பமானது. அதன்பிறகு மன்றில் நடப்பதை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். அம்புலன்ஸ் வந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள். பின்னர் Praljak மருத்துவமனையில் இறந்து போனதாக அறிவிப்பு வந்தது.

மின்துறையில் பொறியியலாளர், நாடக ஆசிரியர், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் எனப் பல பின்புலங்கள் Praljak க்கு இருக்கிறது. ஆனாலும் 1992-1995களில் நடந்த போஸ்னியப் போர் அவரை போஸ்னிய நாட்டின் மேஜர் ஜெனரல் ஆக்கிவிட்டது. முன்னாள் சோசலிசக் குடியரசான யுகோஸ்லாவியாவில் இருந்து போஸ்னியா-ஹெர்சகோவினா தனிநாட்டு கோரிக்கையை வைத்து பிரிந்து செல்லத் தீர்மானித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுச் சண்டை தொடங்கியது. அப்பொழுது குரோஷிய ஆயுதப் படைகளில் இணைந்து கொண்ட Praljak பாதுகாப்பு அமைச்சில் பல பொறுப்புகளில் இருந்திருக்கிறார். குரோஷியன் தேசியபாதுகாப்பு சபையின் உறுப்பினர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் படைகளின் குரோஷியன் பிரதேச சபை உறுப்பினர், பாதுகாப்பு அமைச்சின் உயர்பிரதிநிதி என அவரின் பொறுப்புகள் மிக நீண்டது.

1992-95 காலகட்டத்தில் நடந்த போரில், மோஸ்தர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக Praljak உள்ளிட்ட போஸ்னிய குரேஷிய ராணுவ, அரசியல்வாதிகள் ஆறு பேருக்கு சர்வதேச நீதிமன்றில் 2013ல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பை உறுதி செய்த போதே Praljak விசத்தை தனது முடிவுக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Praljak கிடம் எப்படி விசம் அடங்கிய போத்தல் வந்தது. அதுவும் மன்றத்துக்குள் அதை அவரால் எப்படிக் கொண்டுவர முடிந்தது என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை. ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி இருக்கிறது. Praljak செய்த போர்க்குற்றங்களை ஒத்த அல்லது அதற்கு மேலான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் எல்லாம் 2009இலும் அதற்கு முன்னரும் சிறீலங்காவில் நடந்திருக்கின்றன. அதைச் செய்தவர்கள் எப்போது சர்வதேசக் குற்றவியல் நடுவர்மன்ற விசாரணைகு வரப் போகிறார்கள் என்பதே எனது அந்தக் கேள்வி.

எங்கள் நாட்டு அரசியல் தெரிந்த ஒருவரிடம் இதைப் பற்றி நான் கேட்ட போது அவர் சொன்னார், “சதுரங்க விளையாட்டில் நாங்கள் எப்போதும் போர் வீரர்கள்தான். அப்படி ஒரு நிலை பக்கத்து நாட்டால் எப்போதோ ஏற்படுத்தப்பட்டு விட்டது. அவர்கள் நகர்த்தும் பகடைக்காய்களாக நமது அரசியல் தலைகள் இருக்கும் விதமாக அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றாவது ஒருநாள் அதிசயமாக அது நடந்தால் கூட, சிறீலங்காவில் நடந்தவற்றைக் கேட்டு நீதிபதிதான் மனமுடைந்து, விசம் அருந்தி தற்கொலை செய்வாரே தவிர, குற்றம் செய்தவர்கள் சிரித்துக் கொண்டே தெற்கத்திய வீரர்களாக வெளியே வந்து விடுவார்கள்”

https://www.youtube.com/watch?v=AdQsDopZfS4

- ஆழ்வாப்பிள்ளை
3.12.2017


Drucken   E-Mail

Related Articles