மெளன அலை..

அள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்

உன் நினைவுகளையும் காதலையும்

அடர் இரவில்

யாருமற்ற கடலின் நடுவே

கைவிடப்பட்ட படகொன்றின்

செவிப்பறைகளை

நிசப்த ஊழை கிழிப்பது போல

உன்னுடைய ஆழ்மெளன மிகையொலியால்

வெடித்துப் பிய்கிறதென்

மனச் செவிகள்

பிரிவு ஒரு குழந்தையைப் போல்

நம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி

அங்குமிங்குமாய் ஓடி

அழுதழுது முகம் வீங்கி

ஏமாற்றப் பெரு மூச்சை

எமைச் சுற்றி இறைக்கிறது

தேச விடுதலையை நெரித்துக் கிழிக்கின்ற

விலங்கினைத் தீய்க்க

பற்றி எரிந்த மண் பற்றில்

உறவுகள் உடைதலும்

சிதைதலும் உலகில்

வலி மிகுந்ததெனினும்

வழமை தான் அன்பே

பிரிவு என்னும் குழந்தை பிறந்தது

நமக்கு மட்டுமே அல்ல மண்ணிலே

நாலு லெட்சம் பேருக்கும் தானடி

 

குண்டுகள் வெடித்துச் சிதறிப் பறந்ததில்

கொலைக்கரம் நீண்டு குரல்வளை நெரித்ததில்

குலை சரிந்து பனை முறிந்தது

ஆயினும்

சரிந்ததைப் பார்த்த வடலிகள் ஒரு நாள்

சரித்திரம் தெரிந்து நிமிரலாம்

நாங்கள்

வரைந்திட முயன்ற வரைபடம் தன்னை

வரைய வடலிகள் நினைக்கலாம்

அன்று

திரும்பி நான் வருவேன்

 

வரப்போகும் அந்த வசந்தத்தின் நாளில்

உன்னை நானும் என்னை நீயும்

அடையாளம் கூடக் காணாதிருக்கலாம்

வாழ்ந்த வாழ்க்கை வழிகள் நெடுக

இனிய நினைவாய் இன்னும் இருப்பதை

உணர்வு மிகுந்த ஓர் தருணம்

எமக்கு உணர்த்தலாம். ஆயினும்

வாழுதற்கென்று  வழங்கிய காலம்

மீழ முடியா இடத்தில் இருப்பதால்

வடலிக்கானதாய் ஆகுமெம் வாழ்வு

 

வளரும் எங்கள் வடலியும் நாளை

தேச வரைபடக் கோட்டினைச் சரியாய்

தீவிரமாக வரைகிற போது

பென்சிலையேனும் தீட்டிக் கொடுத்தல்

பெற்றோராக எம் தலைக் கடனே

அது வரை எம்மிடை

மெளனப் பெருங்கடல் விரிந்தும் அகன்றும்

அங்குமிங்குமாய் அலைகளின் மேலே

காவித் திரியட்டும் எங்கள் காத்திருத்தலை

காதலை..

 

- தி. திருக்குமரன்

Hauptkategorie: blogs கவிதைகள் Zugriffe: 3922
Drucken

Related Articles