இறக்கி விடு என்னை..

களைத்துப் போய் விட்டேன்
காலச் சாரதியே
என் மண்ணைப் பார்க்க முடிந்த
எங்கேனுமோர் திருப்பத்தில்
என்னை இறக்கி விடு

நேற்றெனும் நினைவு கலங்கலாய்,
இன்று இதோ கடந்து போகிறது
நாளை தெரியாது
இல்லாமைப் பெருங்கனத்தை
இருப்பாய்ச் சுமந்தபடி
எவ்வளவு தூரந்தான்..
இறக்கி விடு

ஓர்மம் என்னவாயிற்றென்பதுவாய்
உயர்த்தாதே புருவத்தை!
இரும்பு முட்களேறும் இருளறை,
வதையே சிதைகின்ற வதை,
ஆளில்லாத வெளி,
ஆறுதற்குத் தோள் சாய
உறவில்லாத ஊர்,
பிரிவெனும் பெருவலியினாற் பின்னிய
மின்சார நாற்காலி, அதிற் தினமும்
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சும்
கன்றினதும் பசுவினதும் கண்ணீர்
இப்படியோர் பாதை வழி
எனையேற்றி வந்து விட்டு
எப்படி மனம் வந்து
எனைப்பார்த்து ஓர்மமென்பாய்?
குலுக்கிய குலுக்கில்
குடல் பிரண்டு போயிற்று
இனியுமுன் வாகனத்தில்
இயலாது, இறக்கி விடு

எதுவுமே இல்லாமற் போகலாம்
இறுதியிற் போய்ச் சாய்கின்ற மரத்தில்
நிழலிருக்காதென்பதைத்தான்
நினைப்பதற்கே முடியவில்லை
அப்படியே முழுவதுமாய் வழித்தெடுத்து
இரெண்டு கைகளிலும் அள்ளி
உயிரூற்றி வளர்த்த மரமது
மலைபோற் தெரிந்த அதன் கனவை
குடைந்துள் நுளைகையில்
அது தொடுவானமாயிற்று

கடலதை விழுங்கியதாய்
கண்ணுக்குத் தெரிந்தாலும்
உடைத்துக் கொடுத்தது
உப கண்டம் தான்
ஒருநாளில்லை ஒருநாள்
தாகத்தின் தகிப்புத் தாங்காமல்
உபகண்டம் உடைய
உதிக்குமெம் கனவு
அருவமாய் இருந்தேனும்
அதையணைப்பேன், ஆதலால்
இப்போதைக்கென்னை
என் மண்ணிலிறக்கி விடு

குருதி வடியுமெம் கனவின்
காயத்துக்கு
கை மருந்துக் கவிதையால்
கட்டுப் போட்டு விட்டு
எட்டப் போய்விடுகிறேன்
போதுமினி, விரைவாக
இறக்கி விடு என்னை
இனிமேலும் இயலாது..

தி. திருக்குமரன்

Hauptkategorie: blogs கவிதைகள் Zugriffe: 3493
Drucken

Related Articles