சென்றுடுவாய் தோழனே...


நீ கறுப்பு இனத்தின் தலைவன் மட்டுமல்ல.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனத்தினதுக்கும் முன்னுதாரணம்.
அந்த இனத்தின் விடுதலைக்கு
நீ கொடுத்தவிலை பெரிதுதான் – அதுபோல்
கொடுத்தோம் நாமும் பெரும் விலை மண்டேலா
தமிழீழ விடுதலைக்காய்......!!
உன் இனவிடுதலைக்காக இருந்தாய் நீ சிறைவாசம்
அதை மிஞ்ச உலகில் எவருமில்லை இன்றுவரை.

அடக்கியவனைக்கூட அரவணைத்து
விடுதலைப் பற்றூட்டிய ஆசான் நீ!
அன்று உனை பயங்கரவாதி என்றவனெல்லாம்
இன்று வாழ்த்துகின்றான் - நீ
புரட்சி கொண்ட விடுதலை வாதியாம்.
அது நீ மட்டுமல்ல நாங்களும் தான்..!!
ஏறெடுத்தும் பார்க்கவில்லை இவ்வுலகம்
ஏனெனில் நாமும் பயங்கரவாதிகளாம் இன்னும்
உன்னைப் போல் எமையும் புரிந்துகொள்ளும் நாள்வருமென
நம்பிக்கையுடன் நடை போடுகிறோம் சென்றுடுவாய் தோழனே.

நீ விடைபெறப் போகிறாயாம்
உலகத்தலைவர்கள் கூடுகிறார்கள்
தென்னாபிரிக்காவில் உனை வழியனுப்ப!!
சுதந்திரப் போராட்டவீரனே!..
நீ பதியப்பட்டாய் உலக ஏடுகளில் மட்டுமல்ல!
விடுதலைக்காய்ப் போராடும் ஒவ்வொரு
இனத்தின் இதயங்களிலும் தான்

ஈழத்திற்காய்ப் போராடுகிறது ஒரு இனம் - அது
ஒருபோதும் மறவாது உன் வாழ்நாளை
ஏனெனில் உன் வாழ்நாளில் ஓரிடத்திலாவது
எம்மைப் புரிந்திருப்பீர் என்ற நம்பிக்கையில். - அன்று
ஆதரித்தனர் பலர் உன் விடுதலைப் பயணத்தை - இன்று???
ஆர் கண்ணுக்கும் தெரியவில்லையே எம் சுதந்திர தாகத்தை
இருந்தும் நடக்கின்றோம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ...

உலக பந்தெங்கிலுமிருந்து அனுதாபச் செய்தி உன் பிரிவிற்காக
எம் தலைவனும் எம்முடனிருப்பின் - இந்து
மாகடல் தாண்டி வந்திருக்கும்
உனக்கு பிரியாவிடைச் செய்தி!
நெல்சன் மண்டேலாவே........! – நீ
விழித்துப் பாத்திருப்பாய்
விடைபெறும் வேளையில் வீரிய விடுதலைக்காற்று
கடலலை தாண்டிவந்து என் அங்கமெல்லாம்
தழுவிச் செல்கிறது என்று
ஏனோ அது நடக்கவில்லை. இருந்தும் ஈழத்தமிழர் நாம்
வழியனுப்புகிறோம் சென்றுடுவாய் புரட்சி வீரனே!

இலட்சியத்திற்காக சாகவும் தயாராக இருக்கிறேன் - என்ற
உன் தடம் பற்றி நாமும் பயணிக்கிறோம் நீ சென்று வாவென
உனை ஈழத்தமிழன் சார்பில் வழியனுப்புகிறேன். சென்றுடுவாய் தோழனே!

 
- Majura Amb
Hauptkategorie: blogs கவிதைகள் Zugriffe: 3246
Drucken

Related Articles