நாவண்ணா..! ஈரத்தால் என் மடலும் சரிகிறதே!

(நண்பர் நாவண்ணன் அவர்கட்கு)

அன்புடையீர்!
என்பும் உருகிடும் இச்சோகம் நின்தனுக்கு
வந்திடும் என்று நான் நினைத்ததில்லை.

மகளிற்காய் நீ வரைந்த பொழிவு மலர் தந்த போது
மனம் நெகிழ உந்தன் மைந்தனை நினைவு கூர்ந்தாய்
'எல்லா இழப்பும் உழன்று களைத்து விட்டேன்
களத்தினிலே நிற்கும் என் இளங்குஞ்சுக் கேதொன்றும்
நிகழந்திடக் கூடாது என்பதுவே வேட்கை' என்றாய்.
'அவ்வாறானதொரு பேரிடி தாங்கிட
என்னிலோ என் அகத்தாளிலோ
திடவலு இல்லை' யென்று தீனமாய்த் தேம்பி நின்றாய்!

மலர் தந்து நீயெந்தன் கண்பார்வை மறைந்து செல்ல
என் மனையாளை நானழைத்து
முழுவதையும் எடுத்தியம்பி
மனத்தால் உன் துயருணர்ந்து
உளத்தின் சலிப் புணர்வுணர்ந்து
நினைப்பால் இருவருமே வெம்பித்தான் போனோம்

ஐயா!
எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்ட சேதி
இன்றெமது வானொலியில் இடியெனவே வந்த வேளை
பொடிப் பொடியாகித்தான் போய்விட்டோம் நாங்கள்
அதுவும்
இனிமைத் தமிழ் பற்றிய உன் இலக்கியச் சிதறலின்
நெடி மறையு முன்னரே
நேராக வந்ததந்தக் கூரிய அம்பு
மைந்தன் களம்  மாண்ட வீரச் சேதி கொண்டு
ஆற்றவோர் வார்த்தையில்லை - அறிவேன்
ஆயினும்
கூற்றுவன் வந்திழுத்துப் போன கதை அல்லவே - இது
கூற்றுவனை கழுத்தில் நூலோடு தொங்கவிட்டு
மாற்றானை பொருதழித்த மாவீரர் கதையன்றோ
ஆற்றொழுக்குப் போல ஓயாமல் நீர் சிந்தி
அழுதூற்றும் கண்களை நீர் துடைப்பீர்
சீற்றமுடன் நின் உணர்வை கவிதைகளில் வடிப்பீர்
வேறென்ன சொல்ல

நாவண்ணா...!    
ஈரத்தால்  என் மடலும் சரிகிறதே
உன்னை ஆற்றும் திறனில்லை எனக்கு...!

- தீட்சண்யன்
17.5.1997


(கவிஞர் நாவண்ணன் அவர்களின் மகன்
கிங்ஸ்லி உதயனின் வீரமரணச் செய்தி கேட்டு வரைந்த மடல்.)

Hauptkategorie: Blogs கவிதைகள் Zugriffe: 3335
Drucken