ஆசுவாசப்படுத்தும் வேளைகளுக்காகவே...

அவன் வைத்தியசாலைக் கட்டிலில்
படுத்துக் கிடக்கிறான்
எத்தனை கருவிகள்
அவன் மீது பொருத்தப்பட்டிருந்தன
ஒட்டி உலர்ந்து
உலாவிக் கொண்டிருந்த
அந்த உடல்
அங்கு விம்மிப் புடைத்திருந்தது

இரண்டு நாட்கள் கழிந்து
அதே கட்டிலில் ...
சில நிமிடங்களுக்கு முன்தான்
மூச்சு நின்று போயிருந்தது

பெட்டியில் கிடத்தியாயிற்று
ஊர் சுற்றம் சூழம் உறவுகள் கூடி
ஒப்பாரி வைத்தாயிற்று
கவிதை பாடி வரலாறு உரைத்து
இரங்கற்பா இசைத்தாயிற்று
மலர்கள் தூவியாயிற்று

உடல் தாங்கிய பேழையை
உரிமையாகத் தூக்கிச் சென்று
எரித்ததும்
வெறுமை பற்றிக்கொள்கிறது
ஞாபகங்கள் கவ்விய
கோழிக்குஞ்சாக
நசிபடுகின்றேன்

கைகுலுக்கி கட்டியணைத்து
முத்தம் ஈந்து
மயான மண்டபத்தை விட்டு
வெளியேறினால்
ஆற்றுப்படுத்த வழமை போல்
கோப்பிக்கடைகளுக்கே
செல்ல வேண்டியிருக்கிறது

ஆனால் இன்னும்
வார்த்தைகளின் படர்கை
என்னைப் பற்றிப் பிடித்து
ஆனந்தித்து அணைத்து
ஆசுவாசப்படுத்தும்
வேளைகளுக்காகவே
காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது

- நடராஜா முரளீதரன்

Hauptkategorie: Blogs கவிதைகள் - Poems Zugriffe: 438
Drucken