நானும் காத்திருக்கிறேன்

Ammaஅம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன என்ற நப்பாசை நேற்றும் வந்தது.

அம்மா நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலைவில்தான் இருக்கிறா. ஆனாலும் அம்மாவிடம் போய் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது.

முதலில் நானாகத்தான் தவிர்த்துக் கொண்டேன். என்னில் ஏதாவது வைரஸ் இருந்து அம்மாவுக்குத் தொற்றி விடுமோ என்ற பயம்தான் அதற்குக் காரணமாக இருந்தது. அம்மாவுக்கு 86 வயதாகிறது. Pacemaker இன் உதவியுடன்தான் வாழ்வு நகர்கிறது. அதனால் எனக்கு மெலிதான தடிமன் என்றால் கூட நான் அம்மாவிடம் போவதில்லை.

கொரோனா வைரஸ் இப்படிப் பூதாகரமாக உலகளாவிப் பரவும் என முதலே தெரிந்திருந்தால் கடுமையான தடைகள் வருவதற்கு முன்னர் வழமை போல அவ்வப்போது போய் வந்திருப்பேன்.

இப்போது நான் நினைத்தாலும் அங்கு அம்மாவிடம் போக முடியாத நிலை. ஜெர்மனியில் Wolfsburg என்ற நகரத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இறந்து போன துயரசம்பவத்தைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டு விட்டன.

எனது அம்மா வாழ்வது முதியோர் இல்லத்தில் அல்ல. அது ஒரு உதவிக் குடியிருப்பு வளாகம். 60வயதுக்கு மேற்பட்டவர்கள் பிள்ளைகளுக்கும் தொல்லை கொடுக்காமல், தாமும் சுதந்திரமாகத் தனித்து வாழ விரும்பினால், அவர்களுக்காக எமது நகரசபையினால் உருவாக்கப்பட்ட வளாகம் அது. அங்கே 48 குடியிருப்புகளில் 48 வயதானவர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் குடியிருப்பு. ஒவ்வொரு குடியிருப்பிலும் அடிப்படைத் தேவைகளுடனான ஒரு படுக்கையறை, ஒரு விஸ்தாரமான வரவேற்பறை(வாழும் அறை), வசதிகளுடனான சமையலறை, குளியலறை, மலசலகூடம், கூடவே பல்கணி என்று எல்லாமே இருக்கின்றன. தனி ஒருவர் வாழ்வதற்கு மிகத் தாராளமானதும் வசதியானதுமான குடியிருப்புகள் அவை.

வீட்டின் வெளி ஒரு சோலை போல மரங்களும் பூக்களும் செடிகளுமாய் எப்போதும் அழகாக இருக்கும். வயதானவர்கள் படிகளில் ஏற இறங்கக் கஸ்டப் படுவார்கள் என்பதால் பிரத்தியேகமான பாதைகளும் வாசல்களும் படிகள் இல்லாமலும் அமைக்கப் பட்டுள்ளன.

வெளிகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். வீட்டில் ஏதாவது உடைந்து விட்டாலோ வேறேதும் நடந்து விட்டாலோ ஓடி வந்து உதவி செய்வதற்கு ஒரு பாதுகாப்புப் பெண் இருக்கின்றார்.

இத்தனை வசதிகளும், பாதுகாப்பும், சுற்றிவர மனிதர்களும் இருந்தும் அம்மா இந்த மூன்று மாத காலமும் தனிமையில்தான் இருக்கிறா.

`கட்டுப்பாடுகளையும் மீறி ஒரு தரம் போய் வந்தால் என்ன?´ என்று மனசு அவ்வப்போது அவாக் கொள்ளும்.

எனக்கு இற்றை வரை கொரோனா அறிகுறி எதுவும் இல்லாவிட்டாலும் இன்றோ நாளையோ யாரிடமிருந்தாவது தொற்றலாம். நான் வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறேன். கூடவே கடைகளுக்கும் அவ்வப்போது போகிறேன். முடிந்தவரை கவனமாக இருந்தாலும் தொற்றாது என்பதற்கான எந்த உத்தரவாதமுமில்லை.

எல்லாவற்றையும் சிந்திப்பேன். நான் போவதால் அம்மாவுக்கு மட்டுமல்ல அங்கு வாழும் மிகுதி 47பேருக்கும் கூட ஆபத்து வரலாம். அப்படியே என் ஆசையை எனக்குள்ளேயே கட்டிப்போட்டு விடுவேன்.

அம்மாவோடு இப்போது எல்லோரும் தொலைபேசியில்தான் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

வழமையில் அம்மா பக்கத்துக்குக் கடைக்கு அவ்வப்போது நடந்து போய் அவசர தேவைக்கான ஒரு சில பொருட்களை வாங்கி வருவா. ஐந்து நிமிட நடைதான் அந்தக் கடை. அம்மாவுக்கு மெது மெதுவாக நடந்து போக 15-20 நிமிடங்கள் தேவைப்படும். ஆனாலும் அதை அம்மா விரும்பித்தான் செய்வா. „இந்தச் சாட்டில் கொஞ்சம் நடந்து விடுவேன்“ என்பா. நானும் தடுப்பதில்லை. அம்மா active ஆக இருப்பதற்கும் நாலு பேரை வழியிலோ கடையிலோ சந்தித்து நாலு வார்த்தைகளாவது பேசவும் சிரிக்கவும் அது ஏதுவாக இருக்கும். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமற் போய் விட்டது.

மாதத்தில் ஒரு தடவையோ இரு தடவையோ தம்பி பார்த்திபன் மனைவியோடும் இடையிடையே பிள்ளைகளோடும் வந்து அம்மாவைப் பார்த்துப் போவான். வரும் போது தமிழ்க்கடைச் சாமான்கள், தண்ணீர், பால் என்று எல்லாம் வேண்டிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போவான். அந்த வசதியும் சந்தோசமும் கூட இப்போது இல்லாது போய் விட்டது.

எல்லாவற்றையும் விட கிழமையில் ஒரு நாள்-ஒவ்வொரு வியாழன் மாலையும் அங்கு கீழேயுள்ள ஒரு ஹோலில் எல்லோரும் கூடுவார்கள். ஒன்றாக இருந்து கேக் சாப்பிட்டு, கோப்பி குடித்து, பாடி, இருந்து விளையாடும் விளையாட்டுக்கள், கேள்வி பதில், கணக்கு, கார்ட்ஸ், சொற்கள் கண்டு பிடித்தல்... என்று விளையாடிக் குதூகலிப்பார்கள். அந்த நாளை அம்மா ஒவ்வொரு கிழமையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து, வெளிக்கிட்டுக் கொண்டு போவா. அம்மாவை அவர்களுக்கும் பிடிக்கும். „சிவா, சிவா“ என்று அழைத்து, மிகுந்த தோழமையுடன் பழகுவார்கள். அந்த வியாழன் இரவுகளில் அம்மாவுடன் தொலைபேசும் போது அம்மாவிடம் ஒரு துள்ளல் மிகுந்த உற்சாகமும் பிரத்தியேக சந்தோசமும் தெரியும். அந்தச் சந்தோசமும், உற்சாகமும் கூட இப்போது இல்லாது போய் விட்டது.

வயதானவர்களுக்கு இந்தத் தனிமை ஒரு வித பயத்தையும் மனஅழுத்தத்தையம் ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் செய்வதற்கு ஏதுமில்லை.

குளிப்பதற்கு உதவி செய்ய வரும் பெண், வீடு துப்பரவாக்க வரும் பெண், மூன்று நாட்களுக்கு ஒரு தடவை நோவுக்கான பிளாஸ்ரர் ஒட்ட வரும் மருத்துவத்தாதிகள், முழங்கால் நோவுக்கு மசாஜ் செய்ய வரும் Physiotherapist இவர்களை மட்டுந்தான் அம்மா சந்திக்கிறா. அவர்களாவது அங்கு போய் வருகிறார்கள் என்பதில் எனக்குள் ஒருவித நிம்மதி.

கடந்த வியாழனன்று சற்றுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி „கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறார்கள்“ என்று அம்மா சொன்ன போது மகிழ்ந்தேன். நேற்று ஜேர்மனியின் இன்னுமொரு முதியோர் இல்லத்தில் 42 முதியவர்களுக்கும் 12 வேலையாட்களுக்கும் கொரோனாத்தொற்று ஏற்பட்டதையடுத்து மீண்டும் அம்மாவின் இருப்பிடக் கதவுகள் இறுக்கமாகப் பூட்டப்பட்டு விட்டதாக அம்மா சொன்னா. யாரும் உள்ளே போகவோ, உள்ளே உள்ளவர்கள் வெளியே வரவோ அனுமதி இல்லை.

இந்த நடைமுறை அம்மாவுக்கும் அங்கு வாழும் மற்றையவர்களுக்கும் அவசியமானதும் மிகுந்த பாதுகாப்பானதும்தான். ஆனாலும் இந்த நிலை நீண்டால் அது வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

சந்திரவதனா
19.04.2020

தாய் என்னும் தீபத்தை தேடும் ஒளி! - Kuriyeedu
அம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன? - Facebook

Drucken   E-Mail

Related Articles

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

பெருநினைவின் சிறு துளிகள்

Yaar Manathil Yaar... Chandravathanaa

`மே´ மாதம்