குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்

„நாம ஆடுற ஆட்டமும் பாடுற பாட்டும் நாட்டுக்குப் படிப்பினையைத் தந்தாகணும் „ எம்ஜிஆர் படத்தின் பாட்டொன்றில் இந்த வரி இடம் பெற்றிருக்கும்.

இப்பொழுது வரும் திரைப்படங்களைப் பார்த்து எதைப் படிப்பது என்பது தெரியாமல் இருக்கிறது.

சினிமா என்பது எவ்வளவு பெரிய சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர், என்ரீஆர் இருவரும் அந்த சக்தியை தங்கள் வசப்படுத்தி சினிமா, அரசியல் இரண்டிலும் நாயகர்களாக வலம் வந்தார்கள். அவர்கள் செய்ததை இன்று எந்த நடிகராலும் செய்ய முடியமால் இருக்கிறது. இன்றைய சினிமா முற்று முழுதாகத் தன்னை வணிக சினிமாவாக மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்றைய சினிமா என்பது, பணம் பார்ப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டதால் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகளை முழுதாகக் கையில் எடுக்க எந்த சினிமாத் தயாரிப்பாளர்கள் தான் முன் வருவார்கள்? அவர்கள் தயங்குவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. சினிமா என்பது ஒரு வியாபாரம். தங்களது பொருட்களின் அழகைக் காண்பித்து வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதானே ஒரு வியாபாரியின் வெற்றி. அதுதான் நடந்து வருகிறது.

சமீப காலமாகத் தொடர்ந்து வந்த பேய், பிசாசு படங்களைப் பார்த்து பயந்து ஒதுங்கி ஒரு மூலையில் வீழ்ந்திருந்த என்னை குற்றம் கடிதல் என்ற வள்ளுவரின் குறள் ஒன்று எழுந்து நிற்க வைத்திருக்கிறது.

அந்தக் குறள்,
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.


அதனது விளக்கம்,
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.

மேற் குறிப்பிட்ட குறளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப் படம்தான் „குற்றம் கடிதல்'.

சமூகம், அதன் பிரச்சனை என திரைப்படங்கள் எடுத்தால் அது கையைச் சுட்டு விடும் என்ற எண்ணத்தை இந்த வருடம் வெளிவந்த காக்கா முட்டை, குற்றம் கடிதல் என்ற இரண்டு திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. இது ஒரு நல்ல அறிகுறி.

காக்கா முட்டை திரைப்படத்தில் சிறுவனை காவலாளி அடித்ததால் பிரச்சினை உருவாகிறது. குற்றம் கடிதலில் ஆசிரியை சிறுவனை அடித்ததால் பிரச்சினை ஆகி விடுகிறது.

அதிகம் அறிமுகம் இல்லாத நடிகர்கள். பலருக்கு இதுதான் முதற் படமாக இருக்கிறது.

முதல்நாள் தொடங்கிய ஒரு பிரச்சனை அடுத்தநாளில் முடிவுக்கு வருகிறது. ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில் குற்றம் கடிதல் திரைப் படத்தின் கதை நகர்கிறது. இந்த சொற்ப நேரத்துக்குள் எத்தனை விடயங்களைச் சொல்லிச் செல்கிறார்கள். அதுவும் வாழைப்பழத்தில் ஊசி நுளைப்பதைப் போன்று நோகாமலும் அதே நேரம் தெளிவாகவும் சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் பொழுது திரைப்படத்துடன் ஒன்றிப் போவதால் அவை பெரிதாகத் தெரியவில்லை. படத்தைப் பார்த்தபின் அசை போடும் பொழுதுதான் எவ்வளவு சமார்த்தியமாக விடயங்களைச் செதுக்கி இருக்கிறார்கள் என்று ஆச்சரியப் பட வைக்கிறது.

பெரியாரின் கலப்புத் திருமணத்தை செய்து காட்டுகிறார்கள். அதே நேரம் தாலிக்கும் மதிப்பைத் தருகிறார்கள். கடவுள் இல்லை என்ற கொள்கை இருந்தாலும் மதங்கள் சார்ந்தவர்கள் மேல் மதிப்புத் தருகிறார்கள். தமிழ் ஊடகங்களாக இருந்து கொண்டு நிகழ்ச்சிக்கு ஆங்கிலத் தலைப்பிட்டு ஆங்கிலத்திலேயே அதிகமாக உரையாடுவதை குத்திக் காண்பிக்கிறார்கள். நடக்கும் பிரச்சினைகளை தங்களுக்குத் தீனியாக்க முயலும் பத்திரிகைக்காரர்களைக் காட்டுகிறார்கள். பாலியல் கல்வியின் தேவையை அலசுகிறார்கள். ஒரு ஆசிரியையாக மட்டும் மாணவர்களுடன் இருந்து விடாமல் தாயாகவும் இருங்கள் என்று அறிவுரை தருகிறார்கள். இப்படி எத்தனையோ விடயங்களை சின்னச் சின்னக் காட்சிகளுடனும் உரையாடல்களுடனும் குற்றம் கடிதலில் காட்டி இருக்கிறார்கள்.

திரைப்படத்தின் வெற்றி கதைக்கேற்ற ஆட்களைத் தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே அது நூறு வீதம் சாத்தியமாகி இருக்கிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உதவியாளர்கள் என்று எல்லோருமே ஒரு பாடசாலையை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறார்கள். ஓட்டோ சாரதி, லொறிச் சாரதி, அவரது உதவியாளர், விடுதியில் நித்திரை மயக்கத்தில் நிற்கும் சிறுவன், பொலிஸ்காரர்கள், வைத்தியர்கள் என எல்லோரது பாத்திரத் தேர்வு கனகச்சிதம். அதுவும் குறிப்பாக சிறுவனின் தாயாக வருபவர் உடல் தோற்றம் பாத்திரத்திற்கு ஏற்ற நல்ல தெரிவு.

„நான் ஒரு கன்னத்தில் அறைஞ்சால் மறு கன்னத்தைக் காட்டுபவனில்லை' என்று பேசும் சிறுவனின் மாமன், கணவன் பொய் உரைக்கும் பொழுது „இல்லை. நான் ஒரு ரீச்சர்' என்று உண்மை பேசும் ஆசிரியை, மனைவி அவசரப் பட்டு முடிவெடுக்கும் பொழுதெல்லாம் கோவித்துக் கொண்டாலும் பின்னர் அணைத்து ஆறுதல் சொல்லும் கணவன், „போங்க பிறதர்' என்று பக்குவமாகப் பேசும் ஆசிரியையின் தாய், பவ்வியமாகக் கதைத்து காரியம் பார்க்க நினைக்கும் பெண் பொலிஸ் அதிகாரி, தங்கள் சோகங்களை வெளியே காண்பிக்காமல் ஆசிரியைக்கு உதவ முன் வரும் தலமை ஆசிரியரும், அவரது மனைவியும், „எனக்கு என் பிள்ளை பிழைக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்' என முகம் காட்டாமலே அழும் சிறுவனின் அம்மா, சக மாணவிக்கு முத்தம் கொடுத்து விட்டு அதில் என்ன தப்பு என்று ஆசிரியையிடம் துணிவாகக் கேட்கும் அந்தச் சிறுவன் என்று எல்லோரும் இந்தப் படத்தில் இயல்பாகவே வந்து போகிறார்கள்.

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா... என்ற பாரதியாரின் பாடல் இந்தப் படத்தில் அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது.

படத்தின் இடையில் ஒரு தெருக் கூத்து வருகிறது. அது கூட தனியாக நிற்காமல் படத்துடன் பொருந்தி விடுகிறது.

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் பிரம்மா ஒரு புதுமுகம். இந்தப் பிரம்மனின் படைப்பும் அதிசயம்தான்.

- ஆழ்வாப்பிள்ளை
5.10.2015

Quelle - Ponguthamizh


Drucken   E-Mail

Related Articles