கொஞ்சும் குரல்

இன்றைய பாடல் பதிவுகளுக்கு இருக்கும் தொழில் நுட்ப வசதிகள் அன்றைய பாடல் பதிவுகளின் போது கிடையாது. ஆனாலும் பாடல்களை நேர்த்தியாக அன்று ஒலிப்பதிவுகள் செய்து வைத்தார்கள்.

என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய விடயம் என்னவெனில் கணினி உதவியோடு இன்றைய தொழில் நுட்பத்தில் செய்யும் வெட்டி ஒட்டும் வேலையை 1962இல் சாதாரணமாக வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள் என்பதே. அதுவும் தங்களிடம் இருந்த சொற்ப வசதிகளைப் பயன்படுத்தி வெட்டல்கள், ஒட்டல்கள் எதுவும் வெளியே தெரியாமல் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

கொஞ்சும் சலங்கை என்றொரு திரைப்படம் 1962இல் வெளி வந்திருந்தது. ஜெமினி கணேசன், சாவித்திரி, குமாரி கமலா, சாரங்கபாணி, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ராமதாஸ் எனப் பலர் நடித்திருந்தார்கள். டெக்னிக் கலரில் வெளிவந்த படம். இந்தப் படத்தில் இசை மட்டுமல்லாது குமாரி கமலாவும் நடிகை குசலகுமாரியும் இணைந்து ஆடிய போட்டிநடனம் மிகவும் பேசப்பட்டது.

ஜெமினி கணேசன் நாதஸ்வரக் கலைஞராக நடித்திருந்தார். இந்தியாவில் காருக்குறிச்சி எங்கிருக்கிறது என்று தெரியாத எங்களை அந்தப் பெயரை உச்சரிக்க வைத்திருந்தது இந்தப் படம். இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் உன்னத இசையமைப்பில் நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்தின் அமர்க்களமான நாதஸ்வர வாசிப்பு கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இனிமையாக இருக்கும்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.


என்ற இராமலிங்க வள்ளலாரின் அருட்பாவையை சூலமங்களம் ராஜேஸ்வரி பாடி இருப்பார். பாடல் முடிய காருக்குறிச்சி அருணாசலம் அற்புதமாக நாதஸ்வரம் வாசித்து அசத்தி இருப்பார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற...

வள்ளளாரின் இந்த அருட்பாவை இன்றும் கச்சேரிகளில் பலர் குரல்களில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் மதமான பேய் ஆங்காங்கே வந்து பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மதமான பேய் என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய ஒரு பாடல் அன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. கோயில்கள், விழாக்கள் என்று இந்தப் பாடல் எங்கும் வியாபித்து இருந்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பி தேய்ந்து போன இசைத்தட்டு இதுவாகத்தான் இருக்கும். திருவிழாக்களில் பெரியமேளக் கச்சேரி முடிவில் அதிகம் வாசிக்கப் பட்டதும் இந்தப் பாடல்தான்.

சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா...
என்று எஸ். ஜானகி நாதஸ்வர இசையோடு 'நானா நீயா' எனப் போட்டி போட்டுப் பாடிய பாடல் அது.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு ஆலயத்தில் நாயகன் நாதஸ்வரம் வாசிப்பதாக காட்சி. அந்தக் காட்சிக்காக காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில்,
மந்திர---மா வது--நீ--று
வானவர்---மேல் அது--நீ—று
என்ற தேவாரத்தை நாதஸ்வரத்தில் வாசித்து ஒலிப்பதிவும் செய்தாகி விட்டது. நாதஸ்வர இசையோடு ஒரு பெண்குரலும் இணைந்தால் அருமையாக இருக்கும் என அந்தப் படத் தயாரப்பாளரும் இயக்குனருமான எம்.வீ.ராமனுக்கு யோசனை தோன்ற அது இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடுவின் காதுக்கு எட்டியது.

பல முன்னணிப் பாடகிகள் பாடிப் பார்த்தும் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர வாசிப்புக்கு முன்னால் ஈடு கொடுக்க அவர்களால் முடியவில்லை.

இறுதியாக எஸ்.ஜானகிக்கு பாடிப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை எஸ்.ஜானகி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தில் வாசித்த மந்திர---மா வது--நீ—று தேவாரத்துக்கு பொருத்தமாக கு.மா. பாலசுப்ரமணியம் 'சிங்காரவேலனே தேவா..' என்று பாட்டு எழுத எஸ்.ஜானகி பாட பாடல் பதிவாகிறது. இப்பொழுது காருக்குறிச்சியார் வாசித்த நாதஸ்வரத்துக்குப் பொருத்தமாக எஸ்.ஜானகி பாடிய பாடலை வெட்டி ஒட்டும் பணியை சிறப்பாக செய்து முடிக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள்.

வெட்டுக்கள், ஒட்டுக்கள் முடிய தமிழர்களுக்கு ஒரு அற்புதமான நாதஸ்வர இசையும் அதற்கு சவால் விடும் பாணியில் எஸ்.ஜானகியின் குரலில் காலத்தில் அழியாத ஒரு இனிய பாடலும் கிடைத்து விடுகிறது.

பாடல் ஆரம்பிக்கும் முன் ஜெமினி கணேசனினதும், சாவித்திரியினதும் உரையாடல் அன்று பிரபல்யம்.

ஜெமினி கணேசன்: சாந்தா உட்கார். ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா

சாவித்திரி : என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்…

ஜெமினி கணேசன் : தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல்
இந்த சிங்காரவேலன் சந்நிதியில் - நமது
சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்.
பாடு...
பாடு சாந்தா...
பாடு சாந்தா.. பாடு
ஏன் தயக்கம் ம்ம்...
பாடு...

சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு? வா...
சிங்கார வேலனே தேவா
சிங்கார வேலனே தேவா

செந்தூரில் நின்றாடும் தேவா....
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா

செந்தமிழ் தேவனே கேளாய்
செந்தமிழ் தேவனே கேளாய்
இன்று சிறை மீட்டு குறை தீர்க்கவே வா..
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா


சிங்கார வேலனே தேவா...

- ஆழ்வாப்பிள்ளை
14.05.2015


Drucken   E-Mail

Related Articles